
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்ய டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இறுதி கட்ட விசாணை சற்று முன் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் பங்கேற்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது.
சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இந்த நேரத்தில், சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.
இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதன்பிறகு கடந்த 16-ந் தேதி 2-வது கட்ட விசாரணை நடைபெற்றது. அன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன்பின்னர், இறுதி விசாரணையை தேர்தல் கமிஷன் இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சேர்ந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல், டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில், அவரது ஆதரவு எம்.பி.க்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரும் இந்த விசானையில் கலந்து கொண்டுள்ளனர்.
அனேக அதிமுக நிர்வாகிகள் இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என டி.டி.வி.தினகரன் தரப்பில் விசாரணையில் பங்கேற்றுள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மேலும் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பதையும் தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி.தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து வருகின்றனர்.
நவம்பர் 10-ந் தேதிக்குள் இறுதி முடிவை தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.