
இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது நிரந்தரமாக முடக்கி விட வேண்டும் என டி.டி.வி.மினகரன் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதை தொடர்ந்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்ததால், கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இதையடுத்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் சசிகலா அணியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ம் ஓரணியில் இணைந்தனர். இதையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி தீர்ப்பை அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் இரண்டு அணிகளிடமும் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி குறித்தும் அக்டோபர் 6ம் தேதி விசாரணை நடத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
பின்னர் டிடிவி தினகரன் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர், கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதிகட்ட விசாரணையை 13ம் தேதியில் இருந்து அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரனையில் இபிஎஸ் அணி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும், தினகரன் அணி சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 7 எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது நிரந்தரமாக முடக்கி விட வேண்டும் என டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறினார். திமுக நினைப்பதைப் போல எப்படியாவது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் முடக்க வேண்டும் என்று தினகரன் சசி செயலில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
இப்பிரச்சனையில் டி.டி.வி.தினகரன், திமுகவிற்கு துணை போவதாகவும், இதற்காக அவர் பல உத்திகளை கையாளுவதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனின் சதியை முறியடித்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்