
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அவரது தலைமையில் தனி அணி செயல்பட்டது.
அப்போது, சசிகலாவின் அணியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலாவின் அணி சார்பில் தினகரனும் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிட்டனர். அப்போது, இருதரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி ஆதரவாளர்களும் இணைந்து சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். எனினும் தினகரனுக்கும் கட்சியின் நிர்வாகிகள் சிலர், எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் ஆதரவு உள்ளதால், ஓபிஎஸ்-இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என 2 அணிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு, சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இரட்டை இலை வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் அணி தரப்பிலும் கோரப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், பழனிசாமி மற்றும் தினகரன் அணி சார்பில் பிரமாணப் பத்திரங்களும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு, பொதுக்குழுவை கூட்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தையும் துணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியையும் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு தீர்மானங்களின் நகல்களும் பிரமாணப் பத்திரங்களும் பழனிசாமி-பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தினகரன் அணி சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த பிறகு, தினகரன் அணி, பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தது.
அதன்பிறகு இருதரப்பின் வாதங்களும் எழுத்துப்பூர்வ வாதங்களும் தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கப்பட்டன. இருதரப்பின் விரிவான வாதங்களையும் முழுவதுமாக கேட்டறிந்த தேர்தல் ஆணையம், தெளிவான தீர்ப்பை வழங்குவதற்காக தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டது. இந்நிலையில், இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.