
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி நாளை டெல்லி செல்கிறார். வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவதாக இருந்தது. ஆனால் அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்..
இந்நிலையில் நாளை டெல்லி செல்லும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியுடன் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி குறித்து ஆலோசிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆலோசனைக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நாளை ஆர்,கே.நகர் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்படும்போது அங்குள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.