தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை

First Published May 23, 2018, 12:50 PM IST
Highlights
Tutucorin Gun Fire - Judge Aruna Jegadeesan is investigating


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் 100-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். 144 தடை உத்தரவு போட்டிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் கற்களைக் கொண்டு வீசினர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்து அடித்து நொறுக்கினர். இதை
அடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் தடுப்பையும் மீறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். அப்போது பொதுமக்களில் 12-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், மணாவ அமைப்புகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் போலீசார் திட்டமிட்டு போலி என்கவுண்டர் செய்துள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம், மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிசூடு குறித்தும், அங்கு நடந்த வன்முறை குறித்தும் தமிழக அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு ஒரு நபர் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. ஒரு நபர் விசாரணைக் கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்துள்ளது.

click me!