தூத்துக்குடி கலவரம் பற்றி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Asianet News Tamil  
Published : May 30, 2018, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
தூத்துக்குடி கலவரம் பற்றி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சுருக்கம்

Tuticorin riots - The court ordered the Tamil Nadu government

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய பேரணியின்போது ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடியில் பலர் படுகாயமடைந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 13 பேரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்
கூறிவந்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து இதுவரை 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது
வழக்கு பதிய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் முத்து அமுதன், கந்தகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கறிஞர் முத்து அமுதன் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீதும், தலைமை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்படி வழக்கு பதிய வேண்டும். சிறப்பு குழு அமைத்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். 

அதேபோல், கந்தன்குமார் தாக்கல் செய்த மனுவில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் எத்தனைபேர் என்பது குறித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், காயம்பட்டவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த முரளிதரன், கிருஷ்ணமூர்த்தி அமர்வு, துப்பாக்கிச்சூட்டுக்கு துணைதாசில்தார்தான் உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில், தலைமை செயலாளர், காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு ஏன் பதிய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!