தற்போது தமிழகத்தில் தியாகத்திற்கும் துரோகத்திற்கும் போர் நடக்கிறது என்றும் என்னுடன் இருப்பவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் கை கோர்த்த பிறகு எடப்பாடி சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து கழட்டி விடுவது என முடிவெடுத்தார். ஆனால் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏக்களே டிடிவியுடன் இணைந்து எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் துரோகியான பன்னீர்செல்வத்தை சேர்த்து கொண்டு உடன் இருந்த தங்களை கழட்டிவிட்ட எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கொறடா அந்த 19 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி சபாநாயகரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் டிடிவி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். சற்று உடல் நலம் தேறியதையடுத்து இன்று செய்தியாளரகளை சந்தித்தார். அப்போது கடவுளை தவிர எங்களை யாரும் மிரட்ட முடியாது எனவும், தியாகத்திற்கும் துரோகத்திற்கும் நடக்கின்ற போர் எனவும் தெரிவித்தார். எங்கள் பக்கம் இருப்பவர்கள் தர்மத்தின் வழியில் நிற்கின்றனர் எனவும், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எம்.எல்.ஏக்கள் நம்புகிறார்கள் எனவும் டிடிவி தெரிவித்தார். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எம்.எல்.ஏக்கள் அங்கு தங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.