
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து வரும் 29 ஆம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடந்தது.
இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குபதிவு அன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.ஆர்.கே.நகரில் 258 வாக்குச்சாவடிகளில் பதிவான 1.76 லட்சம் வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டது.
இதில் 19 சுற்றுக்களின் முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து நின்ற 58 வேட்பாளர்களில் 57 பேரை அவர் டெபாசிட் இழக்கச்செய்தார். இந்த வெற்றி மூலம் இடைத்தேர்தல் வரலாற்றில் டி.டி.வி.தினகரன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். அன்று ஏகாதசி என்பதால் அன்று பதவி ஏற்க உள்ளதாக தெரிகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் டிடிவி தினகரனுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக பதவி பிரமானம் செய்து வைக்க உள்ளார்.