
ஆர்கே நகர் இடைத் தேர்தல் நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், சில கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. அதன் பேரில் அதிகாரிகள் ஏராளமானோரை கைது செய்தனர். பல லட்சம் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது
அப்போது, ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பட்டியல் அதிகாரிகளிடம் சிக்கியது. அதில், ரூ.89 கோடி வரை பட்டுவாடா செய்ய திட்டமிட்டு இருப்பதும், விஜயபாஸ்க உள்பட 8 அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், இன்று விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆர்கே நகர் இடைத் தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டால், எப்படி எதிர்க் கொள்வது என்பது உள்பட பல்வறு விஷயங்கள் குறித்து பேசப்படுவதாக தெரிகிறது.