"ஜனநாயகத்தை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த பழி அதிமுக திமுக கட்சிகளையே சாரும்" - கொந்தளிக்கும் ராமதாஸ்

First Published Apr 10, 2017, 12:31 PM IST
Highlights
ramadoss statement about election withdrawal


பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தையும், பதிவையும் ரத்து  செய்யும் வகையில்  சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் நடக்க இருந்த  இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வாக்காளர்களுக்கு பணமும், பரிசுகளும் வழங்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டு இன்னொரு நாளில் நடத்துவதால் எந்த பயனும் இல்லை.

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 28 பக்க ஆணையில், தொகுதி முழுவதும் எப்படியெல்லாம் பணம் வினியோகிக்கப்பட்டது என்பது குறித்து வேதனையுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

‘‘ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தனர் என ஏராளமான புகார்கள் வந்தன. இந்த தகவல் வருமானவரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 32 இடங்களில் வருமானவரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் ரூ.89 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆவணங்கள்  விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. வட்ட வாரியாக, வாக்காளர் வாரியாக வழங்கப்பட வேண்டிய பணம் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் விஜயபாஸ்கரின் எம்எல்ஏ விடுதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன’’ என்று ஆணையம் கூறியுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளையும் சேர்ந்தவர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பல இடங்களில் வினியோகித்ததாகவும், பெரும்பாலான இடங்களில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆணையம்  தெரிவித்துள்ளது.

அதிமுகவினர் பண வினியோகம் செய்து முடித்த பின்னர் திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட வில்லை என்றாலும் இது ஊரறிந்த உண்மையாகும்.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டதாக  தேர்தலை ஒத்திவைத்த ஆணையம், அதற்குக் காரணமான அரசியல்கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினாவாகும்.

பணம் வினியோகித்தோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையம் தப்பித்துக் கொள்ள முடியாது. எம்.எஸ்.கில் Vs தலைமைத் தேர்தல் ஆணையர் இடையிலான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘ சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்படுவது மிக முக்கியமாகும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு கடலளவு அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

சில தருணங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இல்லாத நிலையில், மோசமான சூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் தமது கடமையை செய்வதற்கு அனுமதிக்கும்படி இறைவனிடம் கையேந்தவோ அல்லது தமக்கு அதிகாரமளிக்கும்படி வெளிசக்திகளிடம் கெஞ்சவோ கூடாது.

324 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என ஆணையிட்டுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் தஞ்சை, அரவக்குறிச்சி பொதுத்தேர்தலையும், இப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலையும் ஆணையம் ரத்து செய்தது.

அவ்வாறு இருக்கும்போது அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களையும், அவர்களின் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்ய ஆணையம் தயங்குவது ஏன்?

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்ட போது, ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அப்போது அக்கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் இப்போது இராதாகிருஷ்ணன் நகரில் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது.

வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்க அரசியல் கட்சிகள் புதுமையான வழிமுறைகளை புகுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது.

‘‘பிரச்சாரங்களின்போது சட்டவிரோதமாக  பணம் செலவழிக்கப்படுவதை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் அரசியல்கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் கடைபிடிக்கும் புதுமையான வழிமுறைகள் கடுமையான முறையில் ஒடுக்கப்படவேண்டும்.

இதுபோன்ற செயல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி தலைமைகள் ஒதுங்கிவிட முடியாது. இத்தகைய செயல்களுக்கு கட்சித்தலைமைகள் வெளிப்படையான அனுமதி தராவிட்டாலும், மறைமுகமான ஒப்புதல் அளிப்பதை மறுக்க முடியாது.

ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி பூத்துக்குலுங்க வேண்டுமானால் தவறு செய்யும் தங்கள் கட்சி வேட்பாளர்களை கட்டுப்படுத்த  தங்களின் தார்மீக நெறிசார்ந்த ஆதிக்கத்தையும், சட்ட அதிகாரத்தையும் கட்சித் தலைமைகள் பயன்படுத்த இதுவே சரியான நேரம் ஆகும்’’ என்று தேர்தல் ஆணையம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த அளவு வேதனைப்படுவதற்கும், வேண்டுகோள் விடுக்கவும் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் தான் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இவற்றின் கடந்த கால செயல்பாடுகளே இதற்கு உதாரணம் ஆகும். இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தியதற்காக  அதிமுகவின் இரு அணிகள் மற்றும் திமுக தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகத்தை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த பழி இந்தக் கட்சிகளையே சாரும். ஆணையம் இப்போது விடுத்த வேண்டுகோளை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக விடுத்து வருகிறது.

அதை ஜனநாயகப் படுகொலை செய்யும் திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாததுடன், அதற்கு செயல் வடிவம் கொடுக்க தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தேர்தல் ஆணையம் குறிப்பிட்டவாறு ஜனநாயகம் பூத்துக் குலுங்க வேண்டுமானால்....

1. வாக்காளர்களுக்கு முதலமைச்சர் மற்றும் 30 அமைச்சர்களும் முன்னின்று ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்ததாக தேர்தல் ஆணையம் ஆதாரத்துடன் கூறியுள்ளது. வருமானவரித் துறையிடமும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஊழல் மூலம் குவித்த பணத்தைத் தான் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழங்கினர் என்பதால் அதிமுக அரசைக் கலைக்க வேண்டும். ஆட்சிக் கலைப்பில் பா.ம.கவுக்கு உடன்பாடு இல்லையெனினும் ஜனநாயகத்தைக் காக்க இது அவசியமாகும்.

2. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 30 அமைச்சர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(1)(A) பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(E), (F) பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாற்றின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, திமுக ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

4. வாக்காளர்களை விலைக்கு வாங்கிய அனைத்துக்கட்சிகளின் சின்னங்களையும் முடக்க வேண்டும்.

5. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தையும், பதிவையும் ரத்து  செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

6. மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிற மாநிலத்தைச் சேர்ந்த, பிற மாநிலப் பிரிவைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரியை நியமிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வரை வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும்.

click me!