
கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை வரை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி , நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் எவ்வித ஆவணமும் கைப்பற்றவில்லை என கூறினர்.
இதையடுத்து மேற்கண்ட 4 பேருக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அளித்தனர். அதன்பேரில், தற்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.
வருமான வரித்துறையினரின் இந்த விசாரணைக்கு நடிகர் சரத்குமார், மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் செல்லவில்லை. தற்போது, வருமான வரித்துறை அலுவகம் வந்த 2 பேரிடம் மட்டும் அதிகாரிகள், துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகளின் சோதனையின்போது கீதாலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில், உள்ள பணம் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு மட்டும் பட்டுவாடா செய்யப்பட்டதா அல்லது வேறு பகுதிகளில் வினியோகம் ஆனதா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இந்த விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் சுமார் 2 மணி நேரத்தில் முடிந்துவிடும். அதன்பின் அதற்கான அறிக்கை இன்று மாலைக்குள் தயார் செய்யப்படும் என தெரிகிறது.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்றால், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதையொட்டி அவர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அதே வேளையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்களில், ரூ.89 கோடி ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வது குறித்து வெளியானது.
அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 7 அமைச்சர்கள் பெயர் உள்ளன. அதனால், எடப்பாடியும் இந்த விசாரணையில் சிக்குவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.