
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டின் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், அவரது தந்தை சின்னத்தம்பி, அண்ணன் உதயகுமார் ஆகியோரிடம், வருமானவரி அதிகாரிகள், நேற்று துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், வருமான வரித்துறையினருக்கு, மலைக்க வைக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக மட்டும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவங்கங்கள் ஆகியவற்றிடம் இருந்து, ஒரே வாரத்தில் அவர், 125 கோடி ரூபாய் வசூலித்தது தெரிய வந்துள்ளது.
மேலும், 90 கோடி ரூபாய் அளவிலான பணம், விஜயபாஸ்கர் மூலமாகவே, ஆர்.கே.நகரில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், வருமானவரி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தவிர, அவர் நடத்தும், பள்ளி கல்வி நிறுவனங்கள், கல் குவாரி, பினாமி பெயரில் நடத்துவதாக கூறப்படும் தொலைகாட்சி ஆகியவற்றின் பண பரிவர்த்தனை விவரங்கள் குறித்தும், ஏற்கனவே தகவல்களை திரட்டி வைத்துள்ளனர் வருமானவரி அதிகாரிகள்.
இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும் விஜயபாஸ்கர், பதில் சொல்ல முடியாமல் திணறும் அளவுக்கு பல தகவல்களை திரட்டி அவற்றின் அடிப்படையில், கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர் அதிகாரிகள்.
விசாரணையின் முடிவிலா, அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலோ அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதை தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவது போல், மேலும் சில அமைச்சர்கள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், தினகரன், அமைச்சர்கள் மற்றும் சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.