தேர்தல் எப்போ வந்தாலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்...! கெத்து குறையாத டிடிவி ஆதரவாளர்கள்

By manimegalai aFirst Published Oct 25, 2018, 3:55 PM IST
Highlights

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி நாங்கள் யாரும் வருத்தப்படவில்லை என்றும் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி கூறினார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஆனாலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாகவே டிடிவி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் சென்று அங்கு இசக்கி ரிசார்ட்சில் தங்கியிருந்தனர். இந்த நிலையில்தான் அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. 

உயர்நீதிமன்ற தீர்ப்பை, அதிமுக தரப்பு கொண்டாடி வருகிறது. டிடிவி தினகரன் தரப்போ, 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்க தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு இல்லை என்ற கருத்தை கூறியது. இந்த நிலையில், குற்றாலத்தில் தங்கியிருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்., இசக்கி ரிசார்ட்சில் இருந்து அனைவரும் மதுரை புறப்பட்டுள்ளனர். 

மதுரை புறப்படும் முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, குற்றாலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது, இன்றைய தீர்ப்பு எதிர்பார்க்காத தீர்ப்பாக வந்திருக்கிறது. மக்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு வரும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த தீர்ப்பு எங்களின் எண்ணத்திற்கு மாறாக வந்திருக்கிறது. டிடிவி தினகரன் இன்று மாலை மதுரை வர உள்ளார். 18 சட்டமன்ற உறுப்பினர்களும், டிடிவி தினகரனுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க உள்ளோம். ஒருமித்த கருத்து எடுத்து அடுத்தகட்ட நகர்வை எடுக்க உள்ளோம்.

 

உயர்நீதிமன்ற தீர்ப்பால் நாங்கள் யாரும் வருத்தப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகளை வழங்கினார். அது முற்றிலும் தவறானது. அதில் 18 எம்எல்ஏக்கள் வருத்தப்பட்டதாகவும் சிலர் கண்கலங்கியதாகவும் வெளியிட்டருந்தனர். அது முற்றிலும் தவறு. அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒருமித்த டிடிவியுடன் அணிவகுத்துக் கொண்டிருக்கிறோம். 

தேர்தலை கண்ட அஞ்சுகிற இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இல்லை. தேர்தலை சந்திப்போம். அதற்கு தயாராக இருக்கிறோம். எங்களின் உரிமையைவிட்டுத்தர தயாராக இல்லை. ஒருமித்த கருத்துடன் பயணிப்போம். இந்த தீர்ப்பை பற்றி நாங்கள் யாரும் வருத்தப்படவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறானது. நாளை தேர்தல் வந்தாலும் நாங்கள் போட்டியிடுவோம். குக்கர் சின்னத்தில் நின்று டிடிவி துணையுடன் நாங்கள் நின்று வெற்றி பெறுவோம் என்று செந்தில் பாலாஜி கூறினார்.

click me!