
நிர்வாணமாக போராடிய விவசாயிகளைப் பார்க்காத பிரதமர் மோடி, அதிமுகவின் உள் விவகாரத்தில் தலையிடுவது நல்லதல்ல என்றும் ஜெயலலிதாவின் இடத்தைத் தினகரனை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். காவிரியில் தண்ணீர்விடஅங்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
எது செய்தாலும் தமிழ்நாட்டில் கேட்க ஆளில்லை என்ற எண்ணம் கர்நாடகா மாநில கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இங்கு மாநில உரிமைக்காக போராட யாரும் இல்லை. மணல் குவாரி பங்கு பிரிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மணல் குவாரி பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்போது அ.தி.மு.க.வில் தர்மயுத்தம் 2 ஆம் பாகம் தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி சொல்வதை கேட்பதாக ஓ.பி.எஸ். வெளிப்படையாக கூறுகிறார். அவ்வாறு கூறும் பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் புறக்கணிப்பார்கள்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அ.தி.மு.க.வில் டெல்லியில் இருந்து கொண்டு மோடி பஞ்சாயத்து செய்கிறார். அவர் நல்லெண்ண அடிப்படையில் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரையும் அழைத்து சமாதானம்
பேசியிருக்க வேண்டும். அப்படி செய்தால் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடும் என்பதால் அவர்கள் 2 பேரை மட்டும் அழைத்து பஞ்சாயத்து செய்திருக்கிறார். டெல்லியில் நிர்வாணத்துடன் போராடிய விவசாயிகளை பார்க்காத பிரதமர் மோடி அ.தி.மு.க.வின் உள்விவகாரத்தில் தலையிடுவது நல்லதல்ல என்றும் காட்டமாக கூறினார்.
பிரதமர் மோடியின் பஞ்சாயத்தை அரசியல் அனாதைகள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். பிரதமர் மோடியை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்று அவர் விளக்க வேண்டும். அ.தி.மு.க.வை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.-ம் டெல்லியில் அடகு வைத்துள்ளனர். இவர்களுக்கு பஞ்சாயத்து செய்தவர்களே, இவர்களை சிறையில் அடைக்கும் காலம் வரும். ஜெயலலிதாவின் இடத்தை தினகரனைத் தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.