
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்க இரட்டை இலையை எதிர்த்தே போட்டியிடப்போவது தனக்கு வேதனையளிப்பதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்குப் பின்பு இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்குத்தான் என தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் தற்போது இரட்டை இலை சின்னம் இல்லை என்றாகிவிட்ட நிலையில், ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய டி.டி,வி.தினகரன், அங்கு தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அணியின் 5 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய தினகரன் அணியின் அவைத் தலைவர் அன்பழகன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.டி.வி.தினகரன்,
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி, ஆர்.கே. நகரில் நிச்சயமாக போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தொப்பி சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்த தினகரன் , இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தேர்தல் ஆணைய தீர்ப்பு வந்ததும், இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்தே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சதி நடந்துள்ளது தெரிகிறது என்றும் தினகரன் கூறினார்.
முதல் சுற்றில் இபிஎஸ் - ஓபிஎஸ் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதி சுற்றில் நாங்களே வெற்றி பெறுவோம் என்றும் , சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.