
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு, இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியில் வேட்பாளர் மதுசூதனன் இன்று காலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைதொடர்ந்து பாஜக வேட்பாளரான இசையமைப்பாளர் கங்கை அமரன், ஊர்வமாக மேள தாளத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இந்நிலையில், அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தற்போது, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, தனது சின்னமான தொப்பியுடன் தேர்தல் அலுவலகம் சென்றார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், ஊர்வலமாக வந்த அவர், தலையில் தொப்பியுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபடி சென்றார்.
என்னதான் சிரித்தபடியே வேட்புமனு தாக்கல் செய்தாலும் தாங்கள் இவ்வளவு போராடியும், 122 எம்எல்ஏக்கள், 35 எம்பிக்கள் ஆதரவு இருந்தும் தங்களால் எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலையை மீட்க முடியவில்லையே என்ற உள்ள குமுறலுடன் டிடிவி இருந்ததாகவும் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.