
பதினோறு எம்.எல்.ஏ.க்கள் முழு நேரமாகவும் , ஆறு எம்.எல்.ஏ.க்கள் சூழலை பொறுத்து பார்ட் டைம் ஆகவும், ஒரு எம்.பி. நேரடியாகவும், சில எம்.பி.க்கள் மறைமுகமாகவும் சப்போர்ட்டை அள்ளிக் கொடுக்க கில்லியாக எழுந்து முன்னேறி வருகிறார் தினகரன். ஆட்சியை கலைக்க இன்னும் ஐந்து எம்.எல்.ஏ_க்களின் ஆதரவு மாறினாலே போதும் எனும் நிலையில் எடப்பாடி குழுமத்தின் ஆட்சி குடுமி இப்போது முழுக்க முழுக்க தினகரனின் கைகளில்!
ஆதரவு, எதிர்ப்பு, கவிழ்ப்பு, துரோகம், நட்பு, குழிபறிப்பு என்று அரசியலில் நவரசங்களை இல்லை இல்லை நைன்ட்டி ரசங்களை தேசத்துக்கே காட்டிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. துறை ரீதியாக ஆய்வுகள், முன்னேற்றங்கள், புதிய முயற்சிகள், ஆராய்ச்சி ரீதியிலான திட்டமிடல்கள் என்று ஆட்சிக்கு செய்ய வேண்டிய அர்ப்பணிப்புகள் எவ்வளவோ இருக்க முழுக்க முழுக்க உட்கட்சி சிக்கலில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது தமிழக அரசு.
குடிநீர் பிரச்னை, விவசாயிகள் அவலம், வனம் தாண்டி மனிதர்களை கொல்லும் விலங்குகள், அரசு கல்லூரிகளிலும் ஏழைகளுக்கு இடம் கிடைக்காத சிக்கல்கள்... என்று ஆயிரம் பிரச்னைகள் இருக்க எதையும் கண்டு கொள்வதில்லை அரசு. இதனால் முழுக்க முழுக்க மக்களின் அபிமானத்தை இழந்து கிடக்கிறது.
ஆயிரம் விமர்சனங்கள், லட்சம் கோபதாபங்கள், சபிப்புகள் வந்து விழுந்தாலும் கூட எங்கே ஆட்சி போய்விடுமோ, அதிகாரம் இழந்து அதன் மூலம் வருவாய்களும் வற்றிவிடுமோ என்று அஞ்சி நடுங்குகின்றனர் அமைச்சர்கள். என்ன நடந்தாலும் கவலையில்லை ஆட்சியை தக்கவைப்பது மட்டுமே தலையாய பிரச்னை என்று ஓடிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு வகையாக செக் வைத்திருக்கிறார் தினகரன்.
ஆம் ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தி, அடமானம் வைத்தார்கள் அமைச்சர்கள். ஆனால் இன்று அந்த ஆட்சியே அவர்களை விட்டு போவதற்கான எல்லா முஸ்தீபுகளையும் முன்னெடுக்கிறது தினகரன் அணி என்று உறுதியான தகவல்கள் வந்து கொட்டுகின்றன.
எப்படியாம்?...அதாவது வருகின்ற 14ம் தேதி சட்டசபை கூடுகிறது. இதற்கு இன்னும் ஒரு வாரகாலமே இருக்கும் இந்த நிலையில் தினகரன் தரப்பு சார்பாக சில டிமாண்டுகள் எடப்பாடி வசம் வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சுமார் ஐந்து அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும், எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் நான்கு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பதினோறு பாயிண்டுகள் டிமாண்ட்ஸ் பட்டியலில் உள்ளன.
இவை அனைத்துமே தினகரன் சிறையிலிருந்து வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே எடப்பாடியின் கைகளுக்கு போய் சேர்ந்துவிட்டன. ஆனால் எந்த ரியாக்ஷனும் இல்லை, தினகரன் வெளியே வந்த பின்னும் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஜெயக்குமார் வகை தொகையில்லாமல் தினகரனை வம்பிக்கிழுத்து பேசி வருகிறார் என்பது தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் கடும் கோபம்.
எனவே சட்டசபை கூடுவதற்குள் தினகரன் தரப்பின் டிமாண்டுகளில் கணிசமானவற்றை நிறைவேற்றிட வேண்டும். இல்லையென்றால் தன் கையிலிருக்கும் 21 எம்.எல்.ஏ.க்களின் மூலம் ஆட்சியை கலைக்க வெட்டுத்தீர்மானமே கொண்டுவரப்படும் என்று தினகரனின் தரப்பு எடப்பாடி குழுமத்துக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறதாம்.
சசியை சந்தித்துவிட்டு ‘அறுபது நாட்கள் காத்திருப்பேன்.’ என்று சொன்ன தினகரன் காரிலேறி சென்னை வருகையில் ‘இந்த வெட்டு தீர்மானம்’ பிளானுக்கு முழு வடிவம் கொடுத்துவிட்டதாகவே சொல்கிறது தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்கதமிழ்ச்செல்வன், இன்பதுரை ஆகியோர் தரப்பு.
வெட்டுத்தீர்மானம் ஆட்சியின் பிடியை வெட்டுமா?...வெயிட் அண்டு ஸீ