
ஜெயா டிவியில், மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு, டிடிவி தினகரனை கழக துணை பொது செயலாளர் என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த மாற்றத்துக்கு காரணம், ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருவதே என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியை ஆதரித்து வந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக, அணிகளாக பிளவுபட்டது. இதன் பின்னர், அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அணி என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு நடைபெற்றன. டிடிவி தினகரன்
தனித்து விடப்பட்டார்.
ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுக நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரும், ஜெயா தொலைக்காட்சியும் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அணிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டு தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதுநாள் வரை ஜெயா டிவியில், டிடிவி தினகரன் என்று மட்டுமே குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது, ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில், தினகரன் முன்னிலை பெற்றுவருவதை அடுத்து, கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலை என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில், டிடிவி தினகரன் போட்டியிடுவதற்கு அவரது குடும்பத்தாரே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முன்னிலை பெற்று வருவதை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் பலரிடையே அணி மாறும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிகிறது.