
வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இப்போது தினகரன் மற்றும் அதிமுக., ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி.
துவக்கம் முதலே, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் சுப்பிரமணிய சுவாமி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டபோதே, தினகரனே வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறினார் சு.சுவாமி. மேலும் தனது டிவிட்டர் பதிவுகளில், தினகரனுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரின் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இதில், டிடிவி தினகரன் துவக்கம் முதலே முன்னிலை பெற்று வருகிறார். அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து. இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. அதில், தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெறுவார் எனத் தெரிகிறது. வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போது அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தேசிய அளவில் ஆட்சி செய்யும் பாஜக., நோட்டா பெற்றுள்ள வாக்குகளில் கால் பங்குதான் பெற்றிருக்கிறது என்பதும், கவனிக்கத் தக்கது என்று பா.ஜ.க.,வுக்கு ஒரு குட்டு வைத்திருக்கிறார்.