எடப்பாடியாரின் எமகண்டம், தினகரனின் துர்முகூர்த்தம்... அய்யோ பாவம் ஜெ., ஆன்மா

By vinoth kumarFirst Published Dec 7, 2018, 2:41 PM IST
Highlights

தொட்டதுக்கும், துடைச்சதுக்கும் அ.தி.மு.க.வுடன் போட்டிபோடும் தினகரன் இந்த அஞ்சலி விஷயத்திலும் தன் வேலையை காட்டினார். அ.தி.மு.க.வினரை விட ஒரு ஆளாவது கூடுதலாக தங்கள் ஊர்வலத்தில் இருக்கவேண்டும் என்று அவர் உத்தரவிட! வெற்றிவேல், கலைராஜன்  உள்ளிட்ட சென்னை முக்கிய புள்ளிகள் தங்கள் பங்குக்கு ஆட்களை கொண்டாந்து இறக்கிவிட்டனர்.

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி முடிந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. ஆனாலும், அந்த தினத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், அதிலிருந்து பிரிந்த அ.ம.மு.க.வும், இவர்கள் இருவரையும் அலற விட்டிருக்கும் தீபா பேரவையும் அன்று நடத்திய கூத்துக்கள்தான் இப்போதும் ராயப்பேட்டை தலைமை நிலையத்தில் டிரெண்டிங்கில் இருக்கின்றன. 

அ.தி.மு.க.வினர் சொல்லி சொல்லி சிரிக்கும், முறைக்கும், புலம்பும் அந்த நாள் விஷயங்களில் ஹைலைட்ஸ் ஊர்வலம் இதோ....

* தான் எப்போதுமே மதியம் 12 மணிக்கு மேல்தான் எழுந்திருப்பதாகவும், குளித்து சாப்பிட்டு ரெடியாகி கட்சி வேலையை பார்க்க உட்காரும்போது கிட்டத்தட்ட ராத்திரியாகிவிடுவதாக தன் பேரவையினர் தன்னிடம் புலம்புவதால் பெரும் வருத்தம் உண்டு தீபாவுக்கு. அட்லீஸ்ட் ஜெயலலிதா நினைவு நாளிலாவது அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பத்து கடிகாரங்கள் அலாரமடிக்க, பதினெட்டு சேவல்கள் கோரஸாக கூவ ஒரு வழியாக வெள்ளன எழுந்து, ரெடியாகி காலை எட்டு மணிக்கெல்லாம் தன் கணவருடன் அஞ்சலி செலுத்திட நினைவிடத்துக்கு வந்து நின்றுவிட்டார். மெரீனாவில், கடற்காற்றில் கேசம் கலைய தன் மனைவி தீபா, சின்சியர் சிகாமணியாக நின்றதைப் பார்த்து மாதுக்குட்டி மனமுருகிய காட்சிகள், வர்ரே வாவ் ரகங்கள். 

* தலைக்கு இருநூற்றைம்பது, முந்நூறு ரூபாய் கொடுத்து அமைதிப் பேரணிக்கு ஆட்களை திரட்டியிருந்ததாம் ஆளும் தரப்பு. அறிவிக்கப்பட்ட டைமை தாண்டி ஒரு மணி நேரமாகியும் கூட கூட்டம் ஆயிரத்தை தொடவில்லை என்பதால் அந்த தகவல் லைவ்வாக முதல்வருக்கு சொல்லப்பட்டது. ஆனாலும் அவர் வந்து சேர்ந்ததும் ஆங்காங்கே இருந்தவர்கள் வந்து கூடிட, சில ஆயிரக்கணக்கானவர்களுடன் செம மாஸ் தயாரானது. 

* ஜோஸியம் பார்த்தபடியே தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நகர்த்திய ஜெ., சமாதியை நோக்கி, எமகண்டம் முடிந்த பின்னரே ஊர்வலத்தை துவக்கியதாம் அ.தி.மு.க. தரப்பு. 

* முதல்வர்கள் முதல் மாஜி அமைச்சர்கள் வரை முக்கியபுள்ளிகள் அனைவருமே கறுப்பு நிற சட்டையில் வந்திருக்க வழக்கம்போல் வித்தியாசமான நபராக, வெள்ளை சட்டையில் வந்து நின்றார் திண்டுக்கல் சீனிவாசன். முதல்வர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகையில் திண்டுக்கல்லார் மட்டும் கேமெராக்களை பார்த்து கும்பிடு போஸ் கொடுத்தபோது தலையிலடித்துக் கொண்டனர் சில நிர்வாகிகள். திண்டுக்கல்லாருக்கு ஜோடிகட்டாக அமைச்சர் தங்கமணி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோரும் வெள்ளையும் சொள்ளையுமாக வந்திருந்தனர். திண்டுக்கல்லாரிடம் ஒரு தெம்புக்கார நிருபர், ‘சார் கறுப்பு சட்டை போடலையா?’ என்று கேட்க, கண்டுக்காதது போலவே நகர்ந்துவிட்டார். 

* தொட்டதுக்கும், துடைச்சதுக்கும் அ.தி.மு.க.வுடன் போட்டிபோடும் தினகரன் இந்த அஞ்சலி விஷயத்திலும் தன் வேலையை காட்டினார். அ.தி.மு.க.வினரை விட ஒரு ஆளாவது கூடுதலாக தங்கள் ஊர்வலத்தில் இருக்கவேண்டும் என்று அவர் உத்தரவிட! வெற்றிவேல், கலைராஜன்  உள்ளிட்ட சென்னை முக்கிய புள்ளிகள் தங்கள் பங்குக்கு ஆட்களை கொண்டாந்து இறக்கிவிட்டனர். அந்த கூட்டம் நிச்சயம் அ.தி.மு.க.வை விட அதிகமாகதான் இருந்தது. தினா மகிழ்ச்சி!

* எடப்பாடியாரின் பேரணி, எமகண்டம் முடிந்தவுடன் ஆரம்பமாகியிருந்தது. தினகரனின் பேரணியோ துர்முகூர்த்தம் முடிந்தவுடன் புறப்பட்டது. கண்ணீரோ, விசும்பல்களோ, சில நொடிகள் மானசீகமாக ஜெயலலிதாவை நினைத்துப் பார்த்து வருத்தமோ...எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க வெற்று அரசியல் சம்பிரதாயமாகவே அந்த அஞ்சலி நிகழ்வு முடிந்திருந்தது. அய்யோ பாவம் ஜெயலலிதாவின் ஆன்மா!

click me!