
பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக டிடிவி.தினகரன், அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த்,காங்கிரஸ் சார்பில் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் போட்டியிடும் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் மீரா குமார் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகத்தில் திமுகவினரும், மற்ற மாநிலங்களின் தலைவர்களான லாலு பிரசாத், மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்டேளாரும் பரிந்துரை செய்ய உள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவினரை, குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி பாஜக தலைவர்கள் கேட்டு கொண்டனர்.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிமுக புரட்சித்தலைவி அணியான ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர். இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவை பாஜக வேட்பாளருக்கு தெரிவித்தார்.
இதைதொடர்ந்து பாஜக வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், டிடிவி.தினகரன், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் ஆணைப்படி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவித்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டுக்கு சென்று ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்பி ரித்தீஷ் ஆகியோரும், சந்தித்து பேசினர்.
அதிமுகவில் 3 அணிகள் இருப்பதாக பேசப்பட்டது. அதனை டிடிவி.தினகரன் மறுத்து வந்தார். தற்போது, பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். இந்த நேரத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால், அதிமுகவில் 3வது அணி செயல்படுவது உறுதியாகிவிட்டது என எதிர்க்கட்சியினர்கூறுகின்றனர்.