
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சோனியா காந்தி இருந்து வந்தார். அண்மைக்காலமாக அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதால், கட்சியின் முக்கிய முடிவுகளை அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்திதான் எடுத்துவருகிறார்.
எனவே அவரையே கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற குரலை அக்கட்சியின் நிர்வாகிகள் எழுப்பி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் காரிய கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. இந்த தேர்தல் மூலம், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
காங்கிரஸ் தலைவராக வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலின் போது முதலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ் மனுதாக்கல் செய்தார்.
பின்னர் அவர் வெளியே வரும்போது டிடிவி தினகரன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளே சென்றார். அப்போது மருது கணேஷுக்கு டிடிவி தினகரன் வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு கையை கூப்பி வணக்கம் தெரிவித்தார். இது பரபரப்பாகவும் பரவலாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் எந்த நிலையிலும் திமுகவே தங்களுக்கு எதிரி என்று கூக்கரலிட்டு வந்த டிடிவி தினகரன் தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்து கூறியிருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.