
பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாதான்; மக்கள்தான் எஜமானர்கள்; சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என அதிரடியான கருத்துகளை சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் பண்பலை ஒன்றுக்கு பேட்டியளித்த நடராஜன், எம்ஜிஆருக்குப் பிறகு இரட்டை இலையை கஷ்டப்பட்டு மீட்டெடுத்தது நாங்கள்தான். ஆனால், அப்போதெல்லாம் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காதவர்கள், தற்போது அதிமுகவும் இரட்டை இலையும் தங்களுக்குத்தான் எனவும் தாங்கள்தான் எல்லாம் எனவும் கூக்குரலிடுகின்றனர். பன்னீர்செல்வமும் பழனிசாமியும் பொதுமேடையில் என்னுடன் நேருக்குநேர் விவாதிக்க தயாரா? என நடராஜன் சவால் விடுத்துள்ளார்.
திடீரென விஸ்தரித்துள்ள நீங்கள், எப்படி கட்சிக்கும் சின்னத்திற்கும் உரிமை கோருகிறீர்கள் என்பதே எனது கேள்வி. யார் காலிலும் விழுந்து எந்த பதவியையும் பெறவில்லை என பழனிசாமி சொல்லும்போதே காலில் விழும் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. சொல்லும் அனைத்தையும் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
ஒரு தலைவர் பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுக்கிறா. அந்த முதல்வர் பதவியை வைத்து ஆட்சி அமைத்துக்கொண்டு தலைமை செயலகத்தில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மற்றவர்களின் அதிகாரத்தில் தலையிடுகிறார் பழனிசாமி. தன்னுடைய முதல்வர் அதிகாரத்தை வைத்துக்கொண்டு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயத்தில் பழனிசாமி தலையிடுகிறார்.
பழனிசாமியை முதல்வராக்கியதே சசிகலாதான். ஆனால் அப்போதிலிருந்தே சதி நடந்திருக்கிறது என்பதும் டெல்லியுடன் இவர்களுக்கு உறவு இருந்திருக்கிறது என்பதும் தற்போது அப்பட்டமாக தெரிகிறது.
எப்போது வந்தாலும் சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர். கட்சி தொண்டர்களால் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டவர் சசிகலா. அவர்கள் நோக்கத்திற்கு ஒவ்வொரு அணியாக இருந்துவிட்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டத்தை கூட்டிக்கொண்டிருக்கலாமே தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.
அதிமுக என்பது சாமானியர்களை வைத்து எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆருக்குப் பிறகு இரட்டை இலையை நாங்கள் கஷ்டப்பட்டு மீட்டெடுத்தோம். ஆனால், ஒரே ஆண்டில் கட்சியை போட்டு உடைத்துவிட்டார்கள். கட்சியில் தற்போது அனைவருமே ஒருவித சங்கடத்துடன் தான் உள்ளனர். மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் கையில் தான் எல்லாமே இருக்கிறது. சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர் என்பது மக்களின் முடிவு. எனவே அதை யாராலும் மாற்ற முடியாது என நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.