
பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் புத்தங்களை ஏந்த வேண்டிய கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது நியாயமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டி பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், முள்ளம்பட்டி மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்குள்ள மாணவர்கள் சிலர் பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் காட்சியை, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் பேசிய சிறுவன், தான் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், பள்ளிக்கு முதலில் வருபவர்கள் கழிப்பறையை தூய்மை செய்ய வேண்டும் என ஆசிரியை கூறியதால், தூய்மை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அடுத்து, வட்டார கல்வி அலுவலர் அமுதா, புகாருக்கு உள்ளான முள்ளம்பட்டி துவக்கப் பள்ளிக்கு இன்று நேரடியாக சென்று பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்களிடம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கை கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி ஆகியோரிடம் வழங்கப்படும் எனவும், அதன் பிறகு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் காணொலி மனதை பதைக்கச் செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்கூடக் கழிவறையை சுத்தம் செய்வதாக வெளியாகியிருக்கும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது. புத்தங்களை ஏந்த வேண்டிய கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது நியாயமா? இதுதான் திமுகவின் திராவிட மாடலா? இனி, இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திடக்கூடாது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு வந்து படிக்கும் இடமாக அரசு பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.