
இதைதொடர்ந்து மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலையை போல் சித்தரித்து ஒ.பி.எஸ் தரப்பினர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில் போட்டி நிலவியது. உணமையான அதிமுக நாங்களே எனவும், எனவே இரட்டை இலையை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் இருதரப்பிடமும் நேரில் விசாரணை நடத்தியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கியதால் இரட்டை இலையை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பின்னர், டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னத்தையும் ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தொடர்ந்து இருதரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலையை போல் சித்தரித்து ஒ.பி.எஸ் தரப்பினர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.