திமுக-காங்கிரஸ் தொடங்கிய சமூகஅநீதி... பாஜகவும் தொடருது... மு.க. ஸ்டாலின் பரிகாரம் தேட டிடிவி தினகரன் அட்வைஸ்!

By Asianet TamilFirst Published May 30, 2020, 8:23 PM IST
Highlights

அகில இந்திய அளவிலான மருத்துவப்படிப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருக்க வேண்டிய 2007-ம் ஆண்டிலிருந்து 2014 வரை, மத்திய அரசில் அங்கம் வகித்த போதெல்லாம், அதனை மறந்திருந்த திமுகவுக்கு, அவர்களது வழக்கப்படி அதிகாரத்தில் இல்லாத போதுதான் பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி திடீரென அக்கறை பிறந்திருக்கிறது. 

மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை பாஜக அரசும் தொடர்வது சரியானதல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2007-ம் ஆண்டில் இருந்து அகில இந்திய அளவிலான மருத்துவ இடங்களில் ஓ.பி.சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை - தி.மு.க இடம்பெற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடங்கிவைத்த இந்த சமூக அநீதி இன்று வரை தொடர்வது தற்போது தெரியவந்துள்ளது.  இதனை உடனடியாக சரி செய்து இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதுதானே தற்போதைய மத்திய அரசின் சரியான செயல்பாடாக இருக்க முடியும்?

 
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோராக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதிலும் மத்திய அரசு காட்டுவது அவசியமல்லவா? தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதா கட்டிக்‍ காப்பாற்றித் தந்திருக்கிற 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தமிழகம் வழங்குகிற அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் பழனிசாமி அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

 
அகில இந்திய அளவிலான மருத்துவப்படிப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருக்க வேண்டிய 2007-ம் ஆண்டிலிருந்து 2014 வரை, மத்திய அரசில் அங்கம் வகித்த போதெல்லாம், அதனை மறந்திருந்த திமுகவுக்கு, அவர்களது வழக்கப்படி அதிகாரத்தில் இல்லாத போதுதான் பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி திடீரென அக்கறை பிறந்திருக்கிறது. இது உண்மையான அக்கறை என்றால், கூட்டணிக் கட்சிகளைக் கூட்டிவைத்து வெற்றுத்தீர்மானம் போடுவதைத் தவிர்த்து, இத்தனை ஆண்டுகள் இட ஒதுக்கீடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பாவத்திற்கு மு.க.ஸ்டாலின் உரிய பரிகாரம் தேட வேண்டும்.” என்று அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

click me!