
திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் கூறுகிறார். அந்த ஆட்சியில் தான் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
மண்ணையும் மக்களையும் பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து சிவகங்கையில் அமமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் பேசுகையில்: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மண்ணில் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகரில் சுயேட்சை சின்னமான குக்கர் சின்னத்தில் நின்ற போது மக்கள் வெற்றிபெற செய்தனர். சின்னத்தை 15 நாட்களில் கொண்டு சேர்த்து பல தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றது இந்த இயக்கம் தான்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு தீமையே. மீனவர் சிறைபிடிப்பு, நீட் என எல்லாமே காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டதே. திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் திமுக ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெண்கள் என அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில், திமுகவை வெற்றிபெறச் செய்தீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
மேலும் பேசிய அவர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். சில அரசியல் காரணங்களால் நான் அரசியலைவிட்டே 9 ஆண்டு காலம் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை. எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து கூறுகிறார். தினகரன் ஒரு பொருட்டல்ல என்று. இன்றைக்கு நம்முடன் கூட்டணிக்கு தயாராக உள்ளனர். இதனை சரியாக பயன்படுத்தி அனைவரையும் வீழ்த்தி மேலே வர பாடுபடவேண்டும். வருகிற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொருப்பில் அமமுக இருக்கும் என்பதை கூறி அதற்காக பாடுபடவேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.