
ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக சிலர் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதை மக்கள் நன்கு அறிவார்கள் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இயேசுநாதர் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளையோட்டி கிறிஸ்தும பெரு மக்களின் புனித தலங்களின் ஒன்றான வேளாணங்கண்ணியில் ஐக்கிய கிறிஸ்துமஸ் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவின் போது புனிய அந்தோணியார் திருத்தல பங்கு தந்தை அருட்தந்தை சபரிமுத்து குழந்தை ஏசுவை அளிக்க டிடிவி.தினகரன் குழந்தை ஏசுவை குடிலில் அமர்த்தினார்.
பின்னர், மேடையில் பேசுகையில் கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பரிசுகள்தான், தேவன் நமக்கு அளித்த பரிசுதான் ஏசுநாதர். அம்மா அனைத்து மத மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்ப்பை கண்டு அஞ்சாமல் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை பைபிள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கை மூலம் எடுத்துரைக்கிறது. தடைபட்டு கிடந்த கல்வியை சாதாரண மக்களுக்கு கொண்டு சேர்த்தது கிறிஸ்துவ மிஷினரிகள். சேவையை மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு சிறப்பையும், பெருமையையும் சேர்த்தவர்கய் கிறிஸ்துவ பெருமக்கள் என்றார்.
இதனையடுத்து, அருட்தந்தையர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும். ஆளுங்கட்சியாக இருக்கும் போது அதற்கு நேர் எதிர் நிலைப்பாடும் திமுக மேற்கொள்கிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் அதிகாரத்தில் தொடர வேண்டும் என்பதால் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவரும் அறிவர். குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அமமுகவிற்கு எப்போதும் கிடையாது. தேர்தல் வெற்றி, தோல்விகள் என்றும் அமமுகவினரை பாதிக்காது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விவேக்கிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துவது நடைமுறைதான். மேலும், எஸ்டேட் பற்றிய தகவல்கள் அவருக்கு தெரியும் என்பதால் தனிப்படை போலீசார் விவேக்கிடம் விசாரணை நடத்தியிருக்கலாம். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அதிமுக போராட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்கட்சியாக இருந்தால் போராட்டம் நடத்துவது வழக்கம்தான், கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக இருந்த திமுக செய்ததை தற்போது அதிமுக செய்கின்றனர். இவர்களுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.