எம்ஜிஆர் வகுத்த விதிகளை மாற்ற துடிக்கும் இபிஎஸ்.! ஆணவம், பணத்திமிரால் பலவீனம் அடையும் அதிமுக.!- டிடிவி தினகரன்

By Ajmal Khan  |  First Published Mar 24, 2023, 1:03 PM IST

 ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்த போதிலும் தோல்வி அடைந்தது. 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்த நிலையில் வாக்கு வித்தியாசம் 67 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்தார்.


அதிமுக பலவீனம் அடைந்துள்ளது

திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதிக்கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,  ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்துவருகிறது.  கடந்த ஆறு ஆண்டுகாலமாக ஒருசில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்துவிட்டது.  அவர்கள் செய்த தவறுகளால் தீயசக்தி திமுக ஆட்சிவர காரணமாக இருந்தவர்கள்தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டமன்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.  ஒரு சிலருடைய இதுபோன்ற சுயநல தவறான பதவி வெறியால் நடக்கின்ற பதவி சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் அம்மாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணருகின்ற காலம் வெகு விரைவில் வரும் என தெரிவித்தார்.

Latest Videos

ஓபிஎஸ் உடன் சந்திப்பு

சசிகலா மற்றும் டிடிவி தினகரனையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இரண்டு பேரும் இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ் கூறியிருப்பது கூட்டணியாக செயல்படுவதை மேற்கோள் காட்டி இருக்கலாம் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணா திமுக இரட்டை இலை சின்னம் கிடைத்த போதும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்த நிலையில், வாக்கு வித்தியாசம் 67 ஆயிரத்தை தாண்டியாதாக தெரிவித்தார். எதிர்கட்சியான அதிமுக ஈரோடு தொகுதி தங்களது கோட்டை என்று கூறி நிலையில் தற்போது கோட்டை விட்டுள்ளதாக கூறினார். 

விதிகளை மாற்றும் இபிஎஸ்

எம்ஜிஆர் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக துரோகத்திற்கு எதிராக அண்ணா திமுகவை ஆரம்பித்தார்.  எந்த ஒரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவைக் கொண்டு நீக்கக் கூடாது என்பதற்காக தான் குறிப்பாக பொதுச் செயலாளர் பதவியினை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என புரட்சித்தலைவர் விதியை கொண்டு வந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை எல்லாம் மாற்றி பொதுத் செயலாளர் தேர்தலில் போட்டியிட 20 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை எனவும் மாற்றியுள்ளார். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சுயநலம். பதவி வெறி. பணத்திமிர். அகங்காரத்தால் அம்மாவின் கட்சி இன்றைக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் உடன் எப்போது சந்திப்பு..? நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைவோம்- சசிகலா பரபரப்பு தகவல்

click me!