இபிஎஸ்யிடம் அடைக்கலம் ஆவேன் என எதிர்பார்த்தால் அது ஒரு போதும் நடக்காது.! வீழ்த்தாமல் ஓய மாட்டேன்-டிடிவி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Aug 6, 2023, 3:18 PM IST

 எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை டிடிவி ஒரு போதும் மன்னிக்க மாட்டான். துரோகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன். வரும் காலத்தில் அரசியல் அரங்கில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 


அமமுக பொதுக்குழு கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன்,  தலைவராக சி.கோபாலன், துணை தலைவராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலை , ஜெயலலிதா தான் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்துக்காக செயல்பட்டவர். கோபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாக பழகியவர்.

Latest Videos

undefined

அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை.  என்னால் பலன் அடைந்தவர்களே எனக்கு எதிராக சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். அமமுக தொடங்கி ஆறு ஆண்டுகளை கடந்து விட்டது கட்சி இல்லாமலே சுயேட்சையாக ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றேன். 

சட்டமன்ற தேர்தலானாலும் நாடாளுமன்ற தேர்தலானாலும் தனித்து நிற்கக்கூடிய தைரியம் நமக்கு உள்ளது. அதனால் தான் தேர்தல் பின்னடைவுகள் நம்மை பாதிக்கவில்லை. கிளை இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம். நமக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. பண பலம் தான் இல்லை, ஒருநாள் நிச்சயம் மக்கள் நம்மை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள். நம்முடைய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. மதிய உணவு மட்டுமே கொடுத்துள்ளோம். ஆனால் பொதுக்குழு உறுபினர்களை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி என்ன என்னசெய்தார் என்பது தெரியும். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் தீய சக்தியான் திமுக வை வீழ்த்த முடியும். திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டரோடு இணைய தயார் என சொன்னேன். தேர்தலில் கூட போட்டியிடமாட்டேன் என சொன்னேன். ஏதோ நான் கூட்டணிக்காக காத்திருப்பதை போல எண்ணினார்கள். ஆனால் இன்றைய நிலைமை என்ன? முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் மீதுள்ள வழக்குகளுக்காக அச்சத்தில் உள்ளார்கள். திமுகவுடன் பேரம் பேசி வருகிறார்கள்.  எடப்பாடிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமில்லை. எப்படியாவது தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவியை ஒழித்துவிட வேண்டும் என்பது தான் நோக்கம். இதை கண்டு எல்லாம் நான் அச்சப்படப்போவதில்லை.

மாவட்ட செயலாளர்கள் மீது தைரியமாக நடவடிக்கை எடுக்கும் இயக்கம் அமமுக. அதிமுக மாவட்ட செயலாளர் மீது கை வைக்க முடியுமா? கை வைத்தால் நெல்லிக்காய் மூட்டை சரியும் போல சரிந்துவிடும். கடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பா.ம.க தயவில்லாமல் ஜெயிக்க முடியாது என உணர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். நாங்கள் தைரியமாக தனித்து போட்டியிட்டோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டு வட தமிழ்நாட்டில் எத்தனை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது? பா.ம.க இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது. கோடநாடு விவகாரத்தில் ஆர்பாட்டம் நடத்திய போது எந்த இடத்திலும் எடப்பாடி பெயரை சொல்லவில்லை. ஆனால் அதிமுகவினர் ஏன் கோபப்பட்டார்கள். நாங்களும் ஓ.பி.எஸ் ஒன்றாக சேர்ந்தால் அதிமுகவினருக்கு ஏன் கோவம் வருகிறது?

எங்களை தான் வேண்டாம் என ஒதுக்கிவிட்டீர்களே.. பிறகு ஏன் கோவம்? உங்களை வீழ்த்தாமல் ஓயப்போவதில்லை. அதிமுகவினர் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள். எத்தனை நாள் கொடுக்க முடியும் என பார்க்கலாம். பணம் இருந்தும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறவில்லை. 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் மட்டும் தான் அதிமுகவால் ஆட முடியும்
எங்களை போல தனித்து நிற்க முடியுமா? 

எடப்பாடி பழனிசாமி தனித்து நிற்பாரா? தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியமும் தில்லும் அமமுகவுக்கு மட்டும் தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் அடைக்கலம் ஆவேன் என எதிர்பார்த்தால் அது ஒரு போதும் நடக்காது. எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை டிடிவி ஒரு போதும் மன்னிக்க மாட்டான். துரோகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன். வரும் காலத்தில் அரசியல் அரங்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்.  எடப்பாடி பழனிசாமி எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தலில் நின்றாலும் உங்களை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தல் களம் காண்போம்

கூட்டணியில் இல்லாவிட்டால் யாருக்கு நஷ்டம் என எல்லோருக்கும் தெரியும். முதலில் துரோகிகளை வீழ்த்துவோம். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளவர்கள் "கூட்டப்பட்ட கூட்டம்"அமமுகவில் வந்தவர்கள் தானாக சேர்ந்த கூட்டம். எடப்பாடி பழனிசாமி எத்தனை மாநாடு போட்டாலும் முடியாது. மதுரை மாநாட்டுக்கு எப்படியும் 100 கோடி செலவு செய்வார்கள். தென் மாவட்டத்தில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை காட்டிக்கொள்ள மாநாடு நடத்துகிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார். 

click me!