முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் தனக்கு குரு எனவும், நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லையென தங்கதமிழ்செல்வன் தொடர்பாக டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேனியில் டிடிவி
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சியில் செந்தில் நாதனும் போட்டியிடவுள்ளனர். இதனையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் கெங்குவார்பட்டி ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் அமமுக பொதுச் செயலாளரும் தேனி மக்களவை வேட்பாளருமான டி டி வி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன் என கூறினார்.
குருவும் இல்லை, சிஷ்யனும் இல்லை
தங்களது சிஷ்யன் தங்கதமிழ் செல்வன் தங்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு குரு, நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லையென தெரிவித்தார். மக்கள் செல்வர் என்ற பட்டம் தேனி தொகுதி மக்கள் தான் வழங்கினார்கள். டிடிவி என்றால் தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்ற விளக்கமும் தேனியில் தான் அறிவித்தனர். எனவே இந்த தேர்தலில் யாரையும் போட்டியாக நான் கருதவில்லை. ஆரம்பத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்த அவர், தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகு தன்னை சந்தித்த ஓபிஆர் தேனியில் போட்டியிட கேட்டுக்கொண்டதாக கூறினார்.
தேனி தொகுதியில் போட்டி ஏன்.?
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தன்னை தொடர்பு எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் என கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து தான் தேனியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக தெரிவித்தார். மேலும் தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றியடைய செய்வார்கள் என்றும் இதே போல் ராமநாதபுரத் தொகுதியில் ஓ பன்னீர் சொல்லும் அவர்களும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்