காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு சீட்... கேட்ட தொகுதியை கொடுத்து அதிமுகவை அலறவிட்ட டி.டி.வி.தினகரன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 11, 2021, 6:04 PM IST
Highlights

சாத்தூர் தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியான எம்.எல்.ஏ. ராஜவர்மன், இன்று காலை டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்தார். 

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் கட்சியில் சீட் கிடைத்து சட்டமன்ற உறுப்பினரானவர் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மன். சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டால் தோல்வி அடைவார் என பேசியதால் அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்டார். தன்னை கொன்று புதைத்துவிடுவேன் என ராஜேந்திர பாலாஜி மிரட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட ராஜவர்மன் அதிமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காணல் வரை பங்கேற்ற போதும் நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மன் பெயர் இல்லை. அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரவிச்சந்திரன் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர் என்பதால், அவர் ரெக்கமெண்டேஷனில் சீட் கிடைத்துள்ளதாக குற்றச்சாட்டினார். 

சாத்தூர் தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியான எம்.எல்.ஏ. ராஜவர்மன், இன்று காலை டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்தார். அதுமட்டுமின்றி கட்சியில் சேரும் போதே சாத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக விருப்ப மனுவையும் கையோடு கொண்டு வந்து தினகரனிடம் கொடுத்தார். டி.டி.வி. தினகரன் உத்தரவிட்டால் சாத்தூரில் போட்டியிட தயாராக இருக்கிறேன் எனக்கூறியிருந்தார். இந்நிலையில் சற்று முன் அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். அதில் சாத்தூர் தொகுதியில் ராஜவர்மன் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவினரை மட்டுமல்ல அமமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது டிடிவியின் இந்த அறிவிப்பு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  

click me!