அவர் சொல்லி ஒன்னும் நாங்க செய்யல... ஓபிஎஸுக்கு பதிலடி கொடுத்த திமுக அமைச்சர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 4, 2021, 3:16 PM IST
Highlights

ஏதோ ஓ.பன்னீர்செல்வம் கூறியதால் தான் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டது போல் ஓ.பன்னீர்செல்வம் கூறுவதை ஏற்க முடியாது 

ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2ம் தேதி வழங்கினார். 

அதற்கு முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “ஓய்வூதியப் பலன்கள் என்பது ஊதியத்தின் ஒரு பகுதி என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன் பின்னர் இரு தினங்கள் கழித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எனது வேண்டுகோளினை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை 2-6-2021 அன்று நிறைவேற்றியிருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபிஎஸ் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது: கொரோனா காலத்திலும் தொழிலாளர்கள் நலனை காக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நிதி ஒதுக்கி, அதனை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது தன்னுடைய இருப்பை காண்பிப்பதற்காக அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளது. ஆனால் ஏதோ ஓ.பன்னீர்செல்வம் கூறியதால் தான் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டது போல் ஓ.பன்னீர்செல்வம் கூறுவதை ஏற்க முடியாது என்றும், தொழிலாளர்கள் நலன் மீது அக்கறை கொண்ட திமுக அரசு தான் உடனடியாக அதனை நிறைவேற்றியது.  முதலமைச்சர் இப்படியொரு அறிவிப்பை வெளியிடப்போகிறார் என தெரிந்து கொண்டு தான் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார். 

click me!