பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே பாலியல் தொந்தரவு..?? விழுந்தடித்து ஆஜராகிய பத்மா சேஷாத்ரி நிர்வாகிகள்..

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2021, 3:13 PM IST
Highlights

சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ,அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்

சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ,அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் சமூகவலைதளத்தில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்தனர். அதனடிப்படையில் ராஜகோபால் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்பு ராஜகோபாலனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தானாக முன்வந்து கையில் எடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன், பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் புகார் அளித்த மாணவி மற்றும் பள்ளி கல்வி துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. 

அந்த அடிப்படையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முன்பு 10.30 மணி அளவில் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆஜராகினர்.  தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், ராமராஜ், துரைராஜ், ஆகியோர் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளை மையமாக வைத்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு செய்தது பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா? ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பள்ளியில் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டி உள்ளதா?ஆன்லைன் வகுப்புகளை ஏன் முறையாக கண்காணிக்கவில்லை? பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் என்ன மாதிரியான மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஆணையம் அளித்த  சம்மனை குடும்ப உறுப்பினர்கள் ஏற்க மறுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே சிறைத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று ராஜகோபாலனிடம் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. விசாரணையில் பெறப்பட்ட வாக்கு மூலங்களை அறிக்கையாக அரசுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி, சம்மன் பெறப்பட்ட அனைவரும் விசாரணைக்கு வந்தனர். சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து கேள்விகளுக்கு உண்டான பதில்களை தந்தனர். விசாரணை இன்னும் முடிவுப் பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
 

click me!