தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்றுங்கள்.. முதல்வரிடம் தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2021, 2:43 PM IST
Highlights

இச்சந்திப்பின்போது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் பணிக்கொடை ஆகியவை வலியுறுத்தப்பட்டன,

தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி அறிவித்து தற்போது மருத்துவமனையாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை தலைமை செயலகமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், செயின் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமை செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு covid-19 தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 22 முதல் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 13 முத்தாய்ப்பான அறிவிப்புகளை வெளியிட்டமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

இச்சந்திப்பின்போது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் பணிக்கொடை ஆகியவை வலியுறுத்தப்பட்டன, மேலும் தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான அரசு துணைச் செயலாளர் மற்றும் உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில்  பதவிநிலை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இடப் பற்றாக்குறையால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு அலுவலகத்தை மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்ற  வேண்டும் என்ற எண்ணத்தை அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் மக்களை  திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்த நிலையில் தற்போது தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்ற வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!