
தற்போது நடைபெற்று வரும் அம்மாவின் ஆட்சிக்கு அவப்பெயர் உருவாக்கவே நாளை போராட்டத்தை நடத்துகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
41 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வந்தது.
இதனிடையே விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வருகை தருமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு அழைப்பு விடுவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் வாபஸ் பெறுவதாக அய்யாகண்ணு நேற்று தெரிவித்தார்.
அதன்படி நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
நாளை முழு அடைப்பு நடைபெற்றாலும் பால் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு கறவை மாடு வழங்கியுள்ளதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
வறட்சி காரணமாகவே பால் உற்பத்தி சற்று குறைந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் பால்முகவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
அரசு மீது குற்றம் சொல்வதே ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டது.
தற்போது நடைபெற்று வரும் அம்மாவின் ஆட்சிக்கு அவப்பெயர் உருவாக்கவே நாளை போராட்டத்தை நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.