
பன்னீருக்காக என் நிதியமைச்சர் பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன் _ என்று தியாகியாக ஜெயக்குமார் பணிவதும், எங்களுக்கு பதவி முக்கியமல்ல ஜெவின் இறப்பில் நீதி விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும்_ என்று முனுசாமி கலங்குவதும் அ.தி.மு.க.வினருக்கு வேண்டுமானால் அடடே! என்றிருக்கலாம். ஆனால் மக்கள் தெளிந்த மனதுடன் இந்த பேச்சுவார்த்தை வைபவத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையை பொறுத்த வரையில் பொறுப்பு சுமை அதிகமாக இருப்பது பன்னீரின் முதுகில்தான். காரணம், எடப்பாடி தலைமையிலான அணியை ‘ஊழல்வாதிகள், விசுவாசமற்றவர்கள், அம்மாவுக்கே துரோகமிழைத்தவர்கள்.” என்று திட்டி திட்டித்தான் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் பன்னீர்.
பேச்சுவார்த்தையின் முடிவுகள் வெறுமனே பன்னீர் அணியினருக்கு அ.தி.மு.க.வில் இருந்த செல்வாக்கான இடத்தை மீட்டெடுக்கும் ‘பேரமா’ மட்டுமே இருக்குமானால் வரும் காலத்தில் பொதுவெளியில் டாக்டர் விஜயபாஸ்கரை விட மோசமான விமர்சனத்தை பன்னீர் சந்திப்பார்.
வரும் காலத்தில் கட்சியின் நிதி, பதவி, வசதி வாய்ப்புகள் ஆகியவற்றில் பன்னீர் அணிக்கான பங்கினை உறுதி செய்துகொள்ளும் ஒரு உடன்படிக்கை உருவாக்கமாக மட்டுமே இந்த பேச்சுவார்த்தை இருக்குமானால் உதயக்குமார், நாஞ்சில் சம்பத் மற்றும் தளவாயை விட மிக அபத்தமான விமர்சன தாக்குதலுக்கு ஆளாவார்கள் மாஃபா., முணுசாமி போன்றவர்கள்.
சமாதியில் தியானம் செய்துவிட்டு எழுந்த நொடி துவங்கி, தினகரனை எடப்பாடி அணி விலக்கி வைத்த நொடி வரையில் தான் தொடுத்த அத்தனை கேள்வி கணைகளுக்கும் விடை மட்டுமல்ல நீதியையும் சேர்த்து பெறுவதாக இருந்தால் மட்டுமே இனி பன்னீர் மணப்பார்.
போலீஸ் பாதுகாப்பினுள், ராயப்பேட்டை தலைமை கழகத்தினுள் நாம் பேசப்போவது மக்களுக்கு தெரியவா போகிறது? என்று இரு தரப்பினருமே எண்ணிவிடாதீர்கள். காரணம் உங்கள் அம்மாவின் ஆன்மா உங்களைத்தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.