
இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக தினகரனிடம் லஞ்சம் பெற்ற புரோக்கர் சுகேஷ் சந்திரா, தம்மை அவரிடம் ஒரு நீதிபதி என்று சொல்லி நடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 17 ம் தேதி புரோக்கர் சுகேஷ் சந்திராவை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த 1 கோடியே 30 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவன் அளித்த வாக்கு மூலத்தில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தினகரன் 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் தர சம்மதித்ததாகவும், தற்போது கைப்பற்றப்பட்ட பணம், அதற்கான முன் பணம் என்றும் தெரிவித்தான்
இதையடுத்து தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த மூன்று நாட்களாக, சுகேஷ் சந்திரா, தினகரன், அவரது உதவியாளர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில், புரோக்கர் சுகேஷ், தம்மை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக தினகரனிடம் அறிமுகம் செய்து கொண்டு, இரட்டை இலை சின்னத்தை பெற்று தர லஞ்சம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனினும், தினகரனிடமே, நீதிபதியாக நடித்து ஏமாற்றி இருக்கிறான் என்றால், சுகேஷ் சந்திரா, கை தேர்ந்த கில்லாடியாத்தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இதனிடையே, தினகரனுக்கு மிகவும் வேண்டப்பட்ட தளவாய் சுந்தரம், எம்.பி யாக இருந்த போதே, சுகேஷ் சந்திரா அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆகவே, என்ன நடந்தது? எப்படி நடந்தது? யார் மூலம் நடந்தது? என்ற முழுமையான தகவல்கள் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.