புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு... தமிழகத்துக்கு இணையான விலை.. குடிமகன்கள் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published May 24, 2020, 5:16 PM IST
Highlights

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மதுக்கடைகள் இயங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மதுக்கடைகள் இயங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனாவைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், 4ம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி புதுச்சேரியிலும் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பாக கடந்த 18-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதன் பின்னர் 20-ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். 

அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பினர். ஆனால், கொரோனா வரி விதிக்கப்படாததால் அதை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பினார். அன்று முதல் முதல்வர், அமைச்சர்கள் பலமுறை கூடி விவாதித்து கோப்புகளை அனுப்புவதும், ஆளுநர் தெரிவித்த விஷயங்களைச் சேர்ப்பதுமாக நீண்ட இழுபறி நீடித்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி கூறியபடியே பல திருத்தங்களுடன் மீண்டும் கோப்பு சென்றது. இதனையடுத்து,  மதுக்கடைகள் திறக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். 

இதனையடுத்து, மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் இயங்கும். அடுத்த 3 மாதங்களுக்கு மதுபானம் மீது கொரோனா வரி விதிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

மற்ற மாநிலங்களில் விற்கும் விலைக்கு ஏற்ப மது விற்பனை செய்யப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 154 மதுவகைகள் ஒரே விலைக்கு விற்பனை செய்யப்படும். மதுக்கடைகளில் மது வாங்க மட்டுமே அனுமதி, கடையில் மதுஅருந்த அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு நபர் நான்கரை லிட்டர் மதுபானம் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடை ஊழியர்கள், மதுபான பிரியர்கள் முக கவசம் அணிவது கட்டாயம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!