திராவிட கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவும் பெரும்புள்ளிகள்... வி.பி.துரைசாமியால் பலம் பெறுமா பாஜக..?

By Asianet TamilFirst Published May 24, 2020, 3:15 PM IST
Highlights

திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியில் இருந்த வி.பி.துரைசாமி பாஜகவுக்கு சென்றிருப்பதன் மூலம், வேதரத்தினம் போல அவரால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1989-ல் நாமக்கல் தொகுதியிலும் 2006-ல் சங்ககிரி தொகுதியிலும் திமுக சார்பில் வெற்றி பெற்ற வி.பி.துரைசாமி, 2011, 2016-ல் ராசிபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 தேர்தலில் இன்றைய பாஜக தலைவர் எல்.முருகன் ராசிபுரத்தில் போட்டியிட்டு 1,730 வாக்குகளை மட்டுமே பெற்றதும் கூடுதல் தகவல்.
 

பாஜகவில் அண்மையில் சேர்ந்த வி.பி.துரைசாமியால் பாஜக பலம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


திமுகவில் அதிருப்தி ஏற்பட்டால் அதிமுகவுக்கு செல்வது; அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டால் திமுகவுக்கு செல்வது என்ற நிலைதான் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திமுக, அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு செல்லும் போக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நயினார் நாகேந்திரன், திமுக, அதிமுக என மாறிமாறி இருந்த நடிகர் ராதாரவி ஆகியோர் பாஜகவுக்கு சென்றனர். தமிழகத்தில் காலூன்ற பாஜக பகீரத பிரயத்தனம் செய்துவந்தாலும், திமுக - அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதிக்கத்தை மீறி அவர்களால் காலூன்ற முடியவில்லை.

 
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பாஜகவிடம் சரண்டராகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், திமுகவை முழு மூச்சாக எதிர்த்துவருகிறது பாஜக. திமுகவையும் திமுக கூட்டணியையும் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் பாஜக இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், திமுகவிலிருந்து அதிருப்தியாளர்களை உருவுவதும் ஒன்று. அதன் பயனாக கடந்த காலங்களில் தீண்டப்படாத கட்சியாக இருந்த பாஜகவுக்கு இன்று திமுகவிலிருந்தே அதிருப்தியாளர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்த சில மாதங்களில்  திமுகவில் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்த நெப்போலியன் பாஜகவில் ஐக்கியமானார். ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்ததோடு சரி, அதன் பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கே கட்சியில் அவருடைய செயல்பாடு இருந்தது, இருந்துவருகிறது.
ஆனால், 2015-ம் ஆண்டில் திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேதாரண்யம் வேதரத்தினம் என்பவர் மூலம், அந்தத் தொகுதியில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்த நிகழ்வும் நடந்தது. 1996, 2001, 2006 என மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுக சார்பில் வெற்றி பெற்றார் வேதரத்தினம். தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர் வேதரத்தினம். 2011  தேர்தலில் வேதாரண்யம் தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு திமுக ஒதுக்கியதால், அதிருப்தியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, பாமகவின் வெற்றியைத் தடுத்தார். இதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வேதரத்தினம்,  பிறகு மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால், கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கியிருந்த வேதரத்தினம், 2015-ல் பாஜகவில் சேர்ந்தார்.


2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் வேதரத்தினம் போட்டியிட்டு 37,086 வாக்குகளைப் பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 37,838 வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த முறையும் வாக்குகளைப் பிரித்து திமுக கூட்டணியைத் தோற்கடித்தார் வேதரத்தினம். 2016 சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக அதிகம் வாக்குகளைப் பெற்ற தொகுகளில் ஒன்றாக வேதாரண்யம் உருவெடுத்தது.


இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியில் இருந்த வி.பி.துரைசாமி பாஜகவுக்கு சென்றிருப்பதன் மூலம், வேதரத்தினம் போல அவரால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1989-ல் நாமக்கல் தொகுதியிலும் 2006-ல் சங்ககிரி தொகுதியிலும் திமுக சார்பில் வெற்றி பெற்ற வி.பி.துரைசாமி, 2011, 2016-ல் ராசிபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 தேர்தலில் இன்றைய பாஜக தலைவர் எல்.முருகன் ராசிபுரத்தில் போட்டியிட்டு 1,730 வாக்குகளை மட்டுமே பெற்றதும் கூடுதல் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் பாஜகவுக்கென வாக்கு வங்கியை உருவாக்குவதில் வேதாரண்யம் வேதரத்தினம் போல வி.பி.துரைசாமி இருப்பாரா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெரியவரும். 

click me!