சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்வு ! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது !!

By Selvanayagam PFirst Published Mar 28, 2019, 10:56 AM IST
Highlights

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், சுங்கவரிக் கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. அதில் 24 சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்தும், 20  சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்தும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 43 சுங்கச்சாவடிகளில், 20-இல் மட்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கவரிக்கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதில் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளும் அடங்கும்.

இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.  இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

சுங்கச் சாவடிகள் மூலம் பயணம் கொள்ளையடிக்கப்பட்டு வருதாக பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் அதைனை முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் தற்போது மீண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!