இன்று கூடுகிறது அமைச்சரவை கூட்டம்… மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை!! | CMStalin

By Narendran SFirst Published Nov 20, 2021, 10:09 AM IST
Highlights

#CMStalin | வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது  உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. 

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது  உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் ராட்சத மோட்டர்கள் மூலம் தண்ணீரை அகற்றவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை நீர் கொட்டித்தீர்த்தது. இதனால் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை பார்வையிட்டார்.

மேலும் மழையால் வீடுகளையும் கால்நடைகளையும் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வீடுகட்டுவதற்கான அரசாணையையும் வழங்கினார். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழுவையும் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்த குழு டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்து அதுகுறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வுக் குழுவினர் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் அறுவடைக்குத் தயாராக இருந்து வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்றும் நடவு செய்து 15 நாட்களைத் தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத் தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6083 மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நவ.20க்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள பாதிப்பு நடவடிக்கையின் போது அமைச்சர்களின் செயல்பாடுகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இது முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் 4வது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!