இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் …. என்னென்ன மாஸ் திட்டங்கள் தெரியுமா ? இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Feb 8, 2019, 6:52 AM IST
Highlights

2019 – 20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார். இதில் ரேஷன் அட்டைதார்களுக்கு இலவச செல்போன், தமிழகம் முழுவதும் முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், தினக்கூலி தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் தீபாவளி போனஸ் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தமிழக அரசின், 2019 - 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், இந்த பட்ஜெட்டில், மக்களை கவரும் வகையில், சலுகைகளும்,  முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட , இடைக்கால பட்ஜெட்டில்  , மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன. மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து, தற்போது  தமிழக அரசு சார்பில், இன்று, 2019 - 20ம் ஆண்டுக்கான பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ளது. 

கடந்த பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 490 கோடி ரூபாயாகவும், நிதி பற்றாக்குறை, 44 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாகவும் இருந்தது. தற்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு,ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. 
பொங்கல் பரிசாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால், இம்முறை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் நாடாளுமன்றத்  தேர்தல் வர உள்ளதால், மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது. பருவ மழை பொய்த்துள்ளதால், குடிநீர் திட்டப் பணிகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச செல்போன் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் தற்போது சென்னையில் உளள முதியவர்களுக்கு மட்டுமே இலவச பஸ் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் தீபாவளிளையொட்டி அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் 5000 ரூபாய் போனஸ் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதே போல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  10 மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

click me!