
பலத்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் கட்சி மற்றும் கட்சிப்பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக பிரிந்த அதிமுக, பின்னர் கடந்த மாதம் மீண்டும் இணைந்தது. ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் டி,டி,வி,தினகரன் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று இ.மதுசூதனன் தலைமையில் காலை 10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்படு. ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் இவர்களில் யாராவது ஒருவர்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும் என தினகரன் தரப்பினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி தரப்பினர் பொதுக்குழுவை கூட்ட எந்தத் தடையும் இல்லை நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையொட்டி, கூட்டம் நடைபெறும் பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் திருப்பிய திசை எல்லாம் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
முதலடிமச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழு என்பது திட்டமிட்டபடி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கூட்டப்படுவதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்விக்கு , இன்று விடை கிடைக்கும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.