
’மிஸ்டர் கூல்’ என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயார்” என்று அவர் அழுத்தி சொல்லியிருப்பது அ.தி.மு.க.வினரை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்....
நாளை நடைபெற இருக்கும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பொதுக்குழுவை தடுத்து நிறுத்த தினகரன் அணியின் வெற்றிவேல் எம்.எல்.ஏ. எடுத்த கடைசிகட்ட முடிவுகளும் எதிர்மறையாகவே முடிந்தன. இந்த தகவலை கேள்விப்பட்டதும் தினகரன் தனது பொறுமையை இழந்தார்.
பொதுக்குழுவின் தீர்மானங்கள் சசிகலாவுக்கும், தனக்கும் மிக மோசமான அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்த கூடும் என்று கணித்திருந்ததாலேயே வெற்றிவேலை வைத்து கடைசி ஓவரில் இரு முதல்வர்களையும் ரன் அவுட் ஆக்க முயற்சித்தார் தினகரன். ஆனால் வொய்டு பந்துகளால் அவர்களின் தலை தப்பியிருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் கடுப்பு மனதுடன் பேட்டி தட்டிய தினகரன்...”முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம். அது முடியவில்லை என்றால் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் தயாராகிவிட்டோம். இத்தனை அவலத்துக்கும் பிறகும் கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட இது அம்மாவின் ஆட்சியல்ல. இது எடப்பாடி பழனிசாமி_ஓ.பி.எஸ். தலைமையில் நடைபெறும் துரோக ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதில்லை. சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஏட்டாக டிபிரமோட் ஆனதுபோல், 3 முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். துணை முதல்வராகிவிட்டார். பதவி இல்லையென்றால் பன்னீர் செல்வத்துக்கு தூக்கம் வராது. தலையை கிள்ள முயற்சிப்போம் இல்லையென்றால் ஆட்சியை தூக்கி எறிவோம்.
துரோகம், சுயநலம் சிந்தனை உடையவர்கள் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்கள்? தமிழகத்தின் நலன் கருதியே இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம்.” என்று அனல் வார்த்தைகளில் கொதித்திருக்கிறார்.
தினகரனின் இந்த தடாலடி முடிவை தி.மு.க. திரைமறைவில் கொண்டாடியிருக்கிறது. அந்த தரப்பிலிருந்து மளமளவென மூவ்கள் ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள். இதன் மூலம் தமிழ அரசியலில் அதிவேகமான பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள்.
பொதுக்குழுவுக்கு என்னதான் தடை நீங்கிவிட்டாலும் கூட தினகரனின் இந்த தடாலடியும், சட்டமன்றம் கூட்டப்பட ஏற்கனவே தி.மு.க. கொடுத்துள்ள ஒரு வார கால கெடுவும் எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பை வெகுவாக பயமுறுத்த துவங்கியிருப்பது நிதர்சனம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.