ஆறாம் கட்ட தேர்தல் தொடங்கியது... 59 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

By Asianet TamilFirst Published May 12, 2019, 8:16 AM IST
Highlights

இன்று நடைபெற்றுவருகிற 59 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 45 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி, இந்திய தேசிய லோக்தளம் தலா ஒரு இடத்தையும், திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றி இருந்தன

டெல்லி, உ.பி. உள்பட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில்  6-வது கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
 இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. 5 கட்டத் தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், டெல்லி, உ.பி., ம.பி. உள்பட 7 மாநிலங்களில் 6-வது கட்டத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலையில் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தலைநகர் டெல்லியில் 7 மணிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்துவருகிறார்கள்.
தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினரும் மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த 7 மாநிலங்களிலும் 10.18 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். 59 தொகுதிகளில் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இன்று நடைபெற்றுவருகிற 59 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 45 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி, இந்திய தேசிய லோக்தளம் தலா ஒரு இடத்தையும், திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. எனவே பாஜகவுக்கு இன்றைய தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்றைய தேர்தலில் மேனகா காந்தி (சுல்தான்பூர்), ஹர்சவர்த்தன் (சாந்தினிசவுக்), அகிலேஷ் யாதவ் (அசம்கார்), திக்விஜய்சிங் (போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (குணா), ஷீலா தீட்சித் (வடகிழக்கு டெல்லி) ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். இன்றைய தேர்தலோடு ஆறு கட்டத் தேர்தல்கள் நிறைவடைகின்றன. இன்னும் ஒரு கட்டத் தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளன. மே 19 அன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
 

click me!