94 வயதான நல்லக்கண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதா..? தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!

By Asianet TamilFirst Published May 12, 2019, 7:49 AM IST
Highlights

சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான 94 வயதான நல்லகண்ணுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தி. நகரில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்துவந்த மூத்தத் தலைவர் நல்லக்கண்ணுவை வீட்டை காலி செய்யச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்  தி. நகரில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு கே.கே. நகரில் இடம்பெயர்ந்துவிட்டார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் 94 வயதான நல்லக்கண்ணுவுக்கு நெருக்கடி தர வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட மூத்த தோழர் நல்லகண்ணு அவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


அதன் காரணமாக, உடனடியாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அரசாங்கத்தை மதிக்கும் அவருடைய நற்பண்பு போற்றுதலுக்குரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கிற தலைவர்களுக்கும் சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.


தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான 94 வயதுடைய மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!