விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பதவி யாருக்கு? மஸ்தான், லட்சுமணன் இடையே கடும் போட்டி?

By vinoth kumarFirst Published May 4, 2021, 6:27 PM IST
Highlights

விழுப்புரம் மாவட்டத்தில் கே.எஸ்.மஸ்தான், சி.வி.சண்முகத்தை வீழ்த்திய லட்சுமணன் ஆகியோருக்கு இடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கே.எஸ்.மஸ்தான், சி.வி.சண்முகத்தை வீழ்த்திய லட்சுமணன் ஆகியோருக்கு இடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளிலும் திமுகவும், 2 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் பாமகவும் வெற்றி பெற்றுள்ளது. இதில், திருக்கோவிலூர் தொகுதியில் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளரான பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதியில் மத்திய மாவட்ட செயலாளரான புகழேந்தி, செஞ்சி தொகுதியில் வடக்கு மாவட்ட செயலாளரான மஸ்தான், விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அதிமுக வடக்கு மாவட்ட செயலளரான லட்சுமணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், திருக்கோவிலூர் தொகுதி கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்தில் அடங்கும் என்பதாலும், ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் பொன்முடிக்கு அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மற்ற 3 திமுக எம்எல்ஏக்களில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைச்சர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் மஸ்தான் அல்லது லட்சுமணனுக்கு அதிக வாய்ப்புள்ளது. 

ஆனால், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி) தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிட்டது. இதில், மாவட்டச் செயலரான கே.எஸ்.மஸ்தான் போட்டியிட்ட செஞ்சி தொகுதியில் மட்டும்தான் வெற்றிபெற முடிந்தது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்த மயிலம், திண்டிவனம் தொகுதிகளை திமுக இந்த முறை இழந்துள்ளது. இது அவருக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

அதேநேரத்தில், விழுப்புரம் தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகத்தை தோற்கடித்த லட்சுமணனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், சி.வி.சண்முகத்தின் அனைத்து அசைவுகளையும் நன்கு அறிந்தவர் என்பதாலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதில், யாருக்கு அமைச்சர் யோகம் இருக்கிறது என்பது மே 7ம் தேதி தெரியவரும். 

click me!