பிரசாந்த் கிஷோர் வேலை செய்தது யாருக்கு? லீக்கான ஆடியோ..! அதிரும் அரசியல் களம்..!

By Selva KathirFirst Published Apr 15, 2021, 11:42 AM IST
Highlights

தமிழகத்தில் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததை போல மேற்கு வங்கத்தில் ஆளும் தி ரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் ஈடுபட்டு வருகிறது.

பாஜக மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக வளர்ந்திருப்பதாக பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ லீக் ஆகி அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.

தமிழகத்தில் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததை போல மேற்கு வங்கத்தில் ஆளும் தி ரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள திரிணாமுல் காங்கிரசை மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கும் பொறுப்பு பிரசாந்த் கிஷோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுகவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை போலவே மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரசுடன் ஐ பேக் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தமிழகத்தை போல் அல்லாமல் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு எதிர்கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியான மார்க்சிஸ்டை வீழ்த்தி முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. இதே போல் 2016ம் ஆண்டு தேர்தலிலும் மார்க்சிஸ்டை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் கடந்த 2016க்கு பிறகு மேற்கு வங்கத்தில் அரசியல் களம் மாறிவிட்டது. அம்மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியாக பாஜக உருவெடுத்தது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது.

 

ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் பாஜக வென்று திரிணாமுல் காங்கிரசுக்கு மட்டும் அல்லாமல் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதன் பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலில் வென்று மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க பாஜக காய் நகர்த்தியது. பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவை என்பதை உணர்ந்து அவருடன் இணைந்து மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் வேட்பாளர் தேர்வு தொடங்கி மம்தாவின் பிரச்சார வியூகம் வரை அனைத்தையும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் தான் கவனித்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த செய்தியாளர்களுடன் பிரசாந்த் கிஷோர் ஆன்லைனில் விவாதம் நடத்தினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் தான் மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரசுக்கு பணியாற்றுகிறாரா அல்லது பாஜகவை வெற்றி பெற உதவுகிறாரா என்கிற கேள்விக்கு காரணமாகிவிட்டது. செய்தியாளர்களுடனான ஆலோசனையின் போது, தன்னுடைய கருத்துக்கணிப்பின் மூலம் மேற்கு வங்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு மேற்கு வங்கத்தில் மிகவும் விசுவாசத்துடன் பாஜகவிற்கு வேலை பார்க்கும் தொண்டர்கள் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் பேசியதாக கூறுகிறார்கள். பத்தாண்டுகள் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு அதிகரித்துள்ளதாகவும், இதுநாள் வரை முஸ்லீம்களை வாக்கு வங்கியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்ததை அறிந்து இந்த முறை இந்துக்கள் ஒரு வாக்கு வங்கியாக உருவாகியுள்ளதாகவும், இதில் சுமார் 55 சதவீத இந்துக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் பேசியதாக சொல்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு எதிரான மனநிலை இல்லை என்றும் மம்தாவிற்கு நிகராக மோடி மேற்கு வங்கத்தில் பிரபலம் அடைந்திருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இப்படி செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் பாஜகவிற்கு ஆதரவாக பேச வேண்டிய காரணம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிகே பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது திரிணாமுலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு தேர்தல் சமயத்தில் செய்தியாளர்கள் மத்தியில் இப்படி பேசியிருப்பதன் மூலம் பாஜகவிற்கு மறைமுகமாக பிகே உதவியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

click me!