
தமிழகத்தில் இருந்துதான் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டியுள்ளது என்றும், கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார்... வருவார்... என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி, தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், தனிக்கட்சி தொடங்கி வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். மேலும் ரசிகர்களையும், மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ”ரஜினி மக்கள் மன்றம்” என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பாக அரசியல் பணிகளை செய்து வருகிறார்.
முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளர். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் சிஸ்டம் இந்தியாவில் சரியில்லையா? தமிழகத்தில் சரியில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டியுள்ளது என்றார். கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த கேள்விக்கு, காலம்தான் பதில் சொல்லும் என்று கூறினார். முன்னதாக நடிகர் கமல் ஹாசன் கூறும்போது, ரஜினியும் - நானும் இணைந்து செயலாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினியும் அது போன்ற பதிலைக் கூறியுள்ளார். உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரஜினிகாந்த் கூறினார்.